Thursday, September 24, 2009

கவனிக்கப்படாத மனிதர்கள் - தெருவாசகம்!

"யுகபாரதி" நான் மிகவும் ரசிக்கும் ஓர் அறிய பாடலாசிரியர் & கவிஞர். என்னைவியக்க வைக்கும் அவரின் பாடல்களாகட்டும்(நிலா நீ வானம் காற்று மழை) அவரின் கவிதை படைப்புகளாகட்டும் வார்த்தைகளால் குறிப்பிட முடியாத அளவிற்கு அறியபொக்கிஷமாக விளங்குகிறது. இதோ அவரின் ஒப்பற்ற படைப்பான தெருவாசகத்திலிருந்து எனக்கு பிடித்த வரிகள் உங்கள் பார்வைக்கு.




---------------------------------------------------------------

ஆலையிட்ட கரும்பென
ஆக்கிய உவமையை இனி
ரோலரிட்ட எறும்பென
கூறுதல் நவீனம் (ரோடு ரோலர் ட்ரைவர்)

---------------------------------------------------------------

ராணிகள் கைவசமிருந்தும்
ஆளத் துணியாதவன்…

சகல சௌகரியங்களோடும்
ஒரு தேசத்திற்கு உங்களை
நாடு கடத்துவான் எனினும்
மூடிய கதவுகளுக்கு அப்பால்
இவன் அகதி.

வாட்டி வதைக்கும்
வாழ்வின் பிணிபோக்க
காட்டிக் கொடுக்கிறான்
காமத்தை (ஏற்பாடு செய்பவன்)

---------------------------------------------------------------

வேர்வை வருவதற்குள்
விடைபெறும் பரதத்தை
வேர்வை வழிய வழிய
விரட்டுகிறாள் கோபத்துடன் (கரகாட்டக்காரி)

---------------------------------------------------------------

வயிற்றுக்கு மிகநெருங்கி
வருகின்ற கேமராவில்
தெரியாது இவள் பசியும்
தெய்வத்தின் வஞ்சகமும் (துணை நடிகை)

---------------------------------------------------------------

ஒட்டாமல் இருப்பவர்கள்
உலவுகின்ற வீதிகளின்
ஒட்டுவதால் இருக்கின்றான்
உண்மைகளைக் கிழிக்கின்றான் (போஸ்டர் ஒட்டுபவன்)

---------------------------------------------------------------

ஆலய வாசல் முன்பே
அனுதினம் இருந்தாலும்
சாமிகள் இவளுடைய
சங்கடத்தைத் தீர்ப்பதில்லை (பூக்காரி)

---------------------------------------------------------------

கம்மலுக்கு வட்டியாக
காதினை வாங்கிக்கொண்டு
விம்மலைக் கொடுத்தனுப்பும்
விசித்திர உதவிக்காரன் (அடகுக் கடைக்காரன்)

---------------------------------------------------------------

இடுப்புப் பாவாடையோ
பிழைப்பு ராட்டினம் (கரகாட்டக்காரி)

---------------------------------------------------------------

பாழடைந்த கண்ணிமையில்
படுத்திருக்கும் எதிர்காலம்
கூன்விழுந்த புன்னகையில்
கொண்டிருப்பான் தவக்கோலம் (உதவி இயக்குநர்)

---------------------------------------------------------------

வேலைக்குப் போவதாக
வீடுவிட்டுக் கிளம்பினாலும்
சாலைகளே இவனுக்கு
சபையாகும் அரசோச்ச

கண்ணிமைக்கும் சமயத்தில்
கனவுவந்து ஸ்தம்பிக்கும்
முன்நிமிர்ந்து ஞானம் பெற
மூவிளக்கு போதிமரம் (போக்குவரத்துக் காவலர்)

---------------------------------------------------------------

விதிவண்டி இவன்மீது
வெறிகொண்டு ஏறியதா
மிதிவண்டி மீது இவன்
நடத்துகிறான் நகர்வலத்தை

கழுவுதற்கு மறந்துவிட்ட
குவளைகளின் கறைபோல
அழுந்தப் பதிந்த நிஜம்
அடிமனத்தில் பழுப்பு நிறம்

ஆறாத தேநீராய்
அனலிருக்கும் மனமெங்கும் (சைக்கிள் டீக்காரன்)

---------------------------------------------------------------

மாதக்கடைசியில்லை
மாதமெல்லாம் கடைசியென்று
ஊதிப்பெருக்குகிறான்
உள்ளிருக்கும் வேதனையை

ஓதுவதால் ஆய பயன்
ஒன்றுமில்லை என அறிந்து
ஊதுகிறான் ஓயாமல்
உயிர் மூச்சை விற்பதற்கு

காற்றைச் சிறைவைக்க
இயலாது என்பவரின்
கூற்றைப் பொய்யாக்கி
காட்டுகிறான் உண்மைகளை (பலூன்காரன்)

---------------------------------------------------------------

என்னிடம் இருப்பவைகள்
ஏழையின் புன்னகைகள்
என்பதை உரக்கச் சொல்லும்
இவனொரு வேர்வை வேடன்

சொல்லில் நஞ்சுணரும்
சூட்சுமம் புரிந்ததனால்
பல்லில் விஷமிருக்கும்
பாம்பிடத்தில் இவன் பிரியம்

சிவனுடைய கழுத்துவரை
செல்வாக்கு பெற்ற பாம்பு
இவனுடைய சொல்கேட்டு
மண்டியிடும் தலைகவிழ்ந்து

பள்ளிகொண்ட திருமாலின்
பாயாக விரிந்த பாம்பு
துள்ளாமல் இவன் விரலில்
தொங்குமொரு சணல் போல

நெளிந்துபோன கனவுகளை
நேராக்க முயலுமிவன்
வைத்திருக்கும் கூடைக்குள்
சைத்தானின் நிழலுருவம் (பாம்பாட்டி)

---------------------------------------------------------------

வெளுத்து வாங்கு என்பதிவன்
விளங்கிக் கொண்ட வாழ்வுமுறை
கொளுத்துகின்ற பசி நெருப்பில்
குளிர்காயும் தூயதிரை

கறைகளை விலக்குமிவன்
கரையேற மடிக்கிறவன்
சுருக்கமுள்ள இடங்களுக்கு
சூடுவைத்துப் பிழைக்கிறவன் (இஸ்திரிக்காரன்)

---------------------------------------------------------------

ஆட்டுவிக்கும் பரம்பொருளை
அவ்வப்போது அறிவதுபோல
காட்டி நிற்கும் இவன் சிரிப்பு
கவலைகளின் மறுபதிப்பு (கழைக்கூத்தாடி)

---------------------------------------------------------------

- செல்வகுமார்இனியன்!!!

Monday, May 18, 2009

ஏனடி இந்த அவலம்???



யாருமற்ற தனிமை எனக்கு கற்று தந்தது,
மரணத்தின் வழிகள் மட்டுமே.
மனவலி மறக்க நான் உண்டாக்கிய காயங்கள்,
இதயத்திற்கு தந்தது இனிமை மட்டுமே.
பூட்டிய அனைத்து வாயில்களையும் தட்டி பார்த்தேன்,
எனக்காக திறந்தது மரண வாயில் மட்டுமே.
வாழ்கையின் வெறுமையை உணர்ந்த எனக்கு,
இறுதி முடிவு மரணம் மட்டுமே.

இனிய தமிழில் உன் இதய குமுறல்களை,
என்றோ நீ எழுதினாய் தவறில்லை.
தனிமையில் தோன்றிய எண்ணங்களை உனக்காகவே,
உயிர் வாழும் சொந்தமாய் நான் வந்தபிறகும்,
மறக்க மறுக்கிறாயே என்னவளே.
ஏனடி இந்த அவலம் ???

(நீ உன்னுயிர் இழக்க துடிக்கும் ஒவ்வொரு நொடியும் என்னுயிரும் சேர்ந்தல்லவா சாகிறது).


- செல்வகுமார்இனியன்!!!

Thursday, January 22, 2009

என்னவளே !!!

ஐந்து வயதில் அரும்பு மொழி கேட்டு அறிந்தாய்,
அதுவும் அதிசயமில்லை!
பத்து வயதில் பணிவாய் கேட்டு அறிந்தாய்,
அதுவும் அதிசயமில்லை!
பருவம் வந்தவுடன் பாசத்துடன் கேட்டு அறிந்தாய்,
அதுவும் அதிசயமில்லை!
நான் மலர்ந்தவுடன் மழலை மொழி கேட்டு,
என்னவளே எப்படி அறிந்தாய் ???
எனக்கு பசிக்கிறதென்று!!! விழிக்கிறேன்,
விழிகளில் கண்ணிரோடு!
இருக்கிறதென்றால் நான் மறுபிறவியில்,
பிறக்க வேண்டும் உன் மலர் மடியில்!!!

இருந்திருக்க வேண்டும் கடவுளுக்கும் உங்கள் மேல் கோபம் இல்லை என்றால் பிறந்திருப்பென? பன்னிரண்டு வருடம் கழித்து இப்பூமியில்!. அப்பப்பா நான் பிறக்க என் தாய் நீ பட்ட துன்பங்களும், இருந்த விரதங்களும் உன் தாய் என்னிடம் கூற கேட்க முடியவில்லை என்னால் எப்படி ஏற்க்க முடிந்தது உன்னால் சிந்தித்தும் பார்க்கமுடியவில்லை. நீ போகாத கோவில்கள் இல்லை நீ வேண்டாத தெய்வங்கள் இல்லை, இருந்த விரதங்கள் எத்துனை நிறைவேற்றிய வேண்டுதல்கள் எத்துனை, நீ உண்ட மண் சோறும், பண்ணிய அங்கபிரதட்சனமும் நான் இப்பூமியில் உலாவரவா ???

என் தாய் "ராணி". பிறந்தது மேல்மருவத்தூர் பக்கமுள்ள ஒரு குக்கிராமத்தில் பிறக்கும் போதே ராணியாகத்தான் பிறந்தார்கள் அதற்க்கு காரணம் அவரின் அப்பா அந்த கிராமத்திலேயே மிக முக்கிய பதவி வகித்தார் அப்பதவி நாட்டமை எனும் மிகவும் பெருமை வாய்ந்த பதவி! ஏனெனில் அப்பதவி மட்டுமே எந்தவித சிபாரிசும் இல்லாமல் ஒரு மனிதனின் நல்லொழுக்கத்தை கருத்தில் கொண்டு ஊர்மக்களால் தரப்படும் ஒன்று. என் தாத்த நல்ல உழைப்பாளி எனவேதான் கடவுள் அவருக்கென்று பரம்பரை சொத்து ஒன்றும் இல்லாமல் செய்து விட்டார். தன் உழைப்பால் மட்டுமே முன்னுக்கு வரவேண்டிய நிலைமை, தன் உழைப்பை கொண்டுதான் தன் நான்கு பெண்களையும் இரண்டு மகன்களையும் காப்பாற்ற வேண்டிய நிலைமை. தந்தையின் உழைப்பில் பிள்ளைகளும் பங்கேற்க வேண்டிய சூழல் மற்ற அனைவரும் அறியா பருவத்தினர் என்பதால் குடும்பத்தின் மூத்த மகளான என் தாய் மீது பொறுப்புகளும் வேலைகளும் குவியத்தொடங்கின. அன்று தொடங்கியது என் தாயின் அமைதியற்ற வாழ்க்கை. என் தாய் ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்பு செல்லும் பொது இரண்டு வரி நோட்டின் விலை 20 பைசா உயர்ந்தது உடனே திடுக்கிட்ட என் தாத்த பள்ளியின் பக்கமே போகாத என் அருமை தாத்த நிறுத்தி விட்டார் என் தாயின் படிப்பை. 15 மாணவர்களை மட்டுமே கொண்டு இயங்கிய அந்த பள்ளியின் முதல் மூன்று மதிப்பென்களுக்குள் வரக்கூடிய ஒரு நல்ல மாணவி படிப்பை நிறுத்துவது பள்ளியின் ஆசிரியருக்கு விருப்பமில்லை சென்று கேட்டார் என் தாத்தாவிடம் சென்றவருக்கு ஏமாற்றமே! தப்பில்லை என் தாத்தாவின் மீதும் "அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு" என்று பழமொழி சொல்லி வாழ்ந்து கொண்டிருந்த அந்த ஊர்மக்கள் மத்தியில் இவர்மட்டும் என்ன மாற்றிய சிந்தித்து விடபோகிறார். அன்றுவரை parttime ஆகா கஷ்ட பட்ட என் தாய் fulltime கஷ்டப்பட ஆரம்பித்தாள்...

பருவம் வரும்வரை ஏழ்மையில் கஷ்ட பட்ட என் தாய் நல்ல நிலைமைக்கு குடும்பம் வந்த பிறகும் கஷ்ட பட்டாள் ஏன் கஷ்ட படுகிறோம் என்று தெரியாமலே? உழைத்தே பழகிய உடம்பல்லவா!!!

மனம் முடிக்கவேண்டிய பருவம் வந்தவுடன் பெண்கேட்டு வரும் படலம் தொடக்கம் என் அம்மாவை கேட்டுவந்த முதல் மாப்பிள்ளை என் அப்பா. ஆனால் என் அப்பா தேடிச்சென்ற 13 வது பெண் என் அம்மா எந்த இடத்திலும் பெண் அமையவில்லையாம். இறுதியாக பெண்பார்த்து முடித்தனர் வரதட்சணையாக என் தாத்த கொடுப்பதாக சொல்லியது என் தாயை மட்டுமே. அனைவரின் சம்மதத்தோடும் தொடங்க பட்ட கல்யாண வேலை என் தாயின் சம்மதத்தை பற்றி மட்டும் கவலைப்படவில்லை. இருந்தும் என் தாய்க்கு பெற்றோர்கள் மேல் மிகுந்த நம்பிக்கை அவளும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டால்.

நல்ல படியாக அரங்கேறியது மணவிழா. முடிந்ததும் தான் என் தாய்க்கு மிகப்பெரிய அதிர்ச்சி "என் அப்பாவிற்கு சுத்தமாக காதுகேட்காது". இருந்தும் எத்துணையோ கஷ்டங்களையும் அதிர்ச்சிகளையும் எதிர்கொண்ட அவளுக்கு இந்த அதிர்ச்சி பெரியதாக தெரியவில்லை. தொடங்கினாள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை.

கல்யாணம் முடிந்த கையுடன் தனிக்குடித்தனம் என்ற பெயரில் சென்னையின் பரபரப்பான வாழ்கைசூழளுக்குள் தனியே விடப்பட்டாள்
என் தாய். என் தந்தைக்கு காது கேட்காது என்பதால் கல்யாண வாழ்க்கைக்கு பிறகும் என் தாய்கே பொறுப்புகள் பெருகின. அதுவரை விவரம் இல்லாமல் கிராமத்து பெண்ணாக இருந்த என் அன்னை கொஞ்சம் கொஞ்சமாக நகரத்து வாழ்க்கையுடன் தன்னை பழக்கிகொண்டாள் என்செய்ய பிறந்த இடம் தராத சந்தோசம் புகுந்த இடம் தரும் என்றெண்ணினால் புகுந்த இடமும் சரி இல்லை.

"கடைசியே நீ எதிர் பார்த்தாய் சந்தோசத்தை என்னிடமிருந்து. அறியா பருவத்தில் உன் ஏக்கத்தை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. அறிந்து கொண்டேன் உன்
ஏக்கத்தை இப்போது ஆனால் அருகில் நீ இல்லை என்செய்வேன் நான் என்னவளே!!!"


- செல்வகுமார்இனியன்!!!

Wednesday, January 21, 2009

முதற் கிறுக்கல்!!!

மனிதனை மற்ற உயிர்களிடத்தில் இருந்து பிரித்து மேன்மைஉடையவனாக இவ்வுலகத்தில் உலாவவிட்டிருப்பது
மற்றஎவைகளிடத்தில் காணப்படாத பகுத்தறிவும், அந்த பகுத்தறிவால் கண்டறியப்பட்ட சிந்தனைகளையும், கருத்துக்களையும், மகிழ்வுகளையும், துக்கங்களையும் உற்றார் உறவினர்கள்
மற்றும் உலகத்துடன் பகிர்ந்து கொள்ளும் தன்மையும்தான் என்றால்
அது மிகைஆகாது...

நாம் கற்று அறிந்த சிந்தனைகளையும் கருத்துக்களையும் உலகிற்கு எடுத்து சொல்ல ஒரு ஊடகம் தேவை அவ்வழியே நான் தேர்வு செய்த ஒரு மிகச்சிறந்த ஊடகமாக இந்த பூவலையை கருதுகிறேன். இக்கணம் முதலாய் நான் என் சிந்தனைகளையும், கருத்துகளையும், வாழ்க்கை பதிவுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள தொடங்குகிறேன் என் புது அத்தியாயத்தை.


- செல்வகுமார்இனியன்!!!